மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்

Devotions

மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்

“மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்..” 1 சாமுவேல் 16:7 மறைந்த கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை அனைத்து கல்லூரி மாணவர்களிடையே நடந்த கவிதைப்போட்டிக்கு நடுவராக பணியாற்ற சென்றிருந்தார். போட்டி ஆரம்பிக்க சற்று நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டதால் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஒரு மாணவன் அவரிடம் வந்து தன்னுடைய கவிதையை வாசித்து பார்க்குமாறு கூறினான். அவரும் வாங்கி வாசித்தார். என்ன ஆச்சரியம்! அந்த மாணவன் கண்ணதாசனே அசந்து போகும் அளவிற்கு ஒரு அருமையான கவிதையை எழுதியிருந்தான். கவிஞர் என்ன செய்தார் தெரியுமா? உடனே ஒரு கவிதையை எழுதி அவனிடம் கொடுத்து விட்டு அந்த மாணவனின் கவிதையை தன்னிடம் வைத்துக்கொண்டார். அந்த மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. போட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு மாணவனாக தங்களுடைய கவிதைகளை வாசிக்கலாயினர். சிலருக்கு பாராட்டும் கிடைத்தன. நம்முடைய மாணவனின் வேளையும் வந்தது. கவிதையை வாசித்தான். சிலர் மட்டும் மெதுவாக கைகளைத்தட்டினர். மாணவன் சோர்வாக அமர்ந்தான். ஒரு வழியாக போட்டி நிறைவடைந்தது. முடிவு அறிவிக்கும் வேளை வந்தது. கண்ணதாசன் “இப்பொழுது நான் ஒரு கவிதையை வாசிக்கிறேன்”என்று கூறிவிட்டு அந்த மாணவனின் கவிதையை வாசிக்கலானார். என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தீர்களா? நீங்கள் நினைத்தது சரிதான். அந்த கவிதையை பாராட்டி பலத்த கரவொலி எழும்பின. சிலர் எழுந்து நின்று கைகளைத்தட்டினர். ஒரே பாராட்டு மழை தான்! அந்த பரபரப்பு அடங்கியவுடன் கண்ணதாசன் சிரித்துக்கொண்டே” இப்பொழுது நான் வாசித்தது யாருடைய கவிதை தெரியுமா?“என்றுக் கேட்டுவிட்டு அந்த மாணவனை மேடைக்கு அழைத்தார். பாராட்டினார் பரிசளித்தார். எனக்கன்பான தேவபிள்ளைகளே இது தான் மனித சுபாவம். 1 சாமுவேல் 16 ல் இப்படிப்பட்ட சம்பவத்தைத் தான் நாம் வாசிக்கிறோம். சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயின் மகனை ராஜாவாக அபிஷேகம் பண்ணுவதற்காக செல்கிறார். ராஜா என்றதும் ஈசாய் பலம் பொருந்திய ராணுவத்திலிருந்த தன் மகன்களை ஒவ்வொருவராக வரவழைத்தான். சாமுவேல் கூட தேவன் இவர்களில் ஒருவரைத்தான் ராஜாவாக தெரிந்தெடுப்பார் என்று எண்ணினார். அப்பொழுதுதான் தேவன் அவரிடம் “ மனுஷன் முகத்தைப் பார்ப்பான். நானோ இருதயத்தைப் பார்ப்பேன்” என்று கூறியதோடு மட்டுமல்லாமல் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை ராஜாவாக தெரிந்தெடுத்தார். இதை வாசிக்கும் தேவ பிள்ளைகளே ஒரு வேளை நீங்கள் பலரால் அசட்டைப்பண்ணபட்டிருக்கிறீர்களோ நம்முடைய கர்த்தர் பாரபட்சம் பார்க்காதவர். மனுஷன் தான் முகத்தைப் பார்ப்பான். நம்முடைய கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறவர். ஒன்று செய்யுங்கள். தாவீதைப் போல கர்த்தரை அனுதினமும் தேடுங்கள். அவரைப் பாடித் துதியுங்கள். அப்பொழுது தேவன் எல்லோருடைய கண்களுக்கும் முன்பாக உங்களையும் உயர்த்துவார்இ கனப்படுத்துவார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன் அல்லேலூயா. ……